CinemaNetflix தளத்தில் வெளியாகியுள்ள The Hunt for Veerappan தொடர் விமர்சனம்

Netflix தளத்தில் வெளியாகியுள்ள The Hunt for Veerappan தொடர் விமர்சனம்

-

விடுதலைப்புலிகளிடம் சென்று தனது கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு கடைசிகாலத்தை அவர்களது மண்ணில் வாழ்வதற்கு விரும்பிய வீரப்பனை – அவனது திட்டத்துக்கு ஏதுவாக வலை விரித்து – கடைசியில் சுட்டுக்கொன்றதாக தமிழக அதிரடிப்படைத் தரப்பு வாக்குமூலம் வழங்கிய கதையோடு முடிவடையும் The Hunt for Veerappan தொடர் Netflix தளத்தில் வெளியாகியுள்ளது.

நான்கு பகுதிகளாக வெளியாகியுள்ள The Hunt for Veerappan தொடரில், கோர்த்துக்கட்டியிருக்கும் அத்தனை சம்பவங்களும் வீரப்பனின் மறைவுக்குப் பின்னர் கடந்த இருபது வருடகாலங்களில் சிறிதாயும் – பெரிதாயும் வெவ்வேறு ஊடகங்களில் கசிந்த விடயங்கள்தான். இருந்தாலும், நாம் வாழ்ந்த காலத்தின் துணிச்சல்காரனின் – சாகசவாதியின் – வாழ்க்கையை தொலைதூரம் வந்து சற்றுத் திரும்பிப் பார்க்கும்போது, அவனது கர்வம் இன்னமும் பிரம்மிப்பாகத் தெரிகிறது.

வீரப்பனும் அவனது செய்திகளும் எங்கள் விடலைப்பருவத்தில் எம்மோடு சேர்ந்து வளர்ந்தவை. காட்டுக்குள்ளும் மீசைக்குள்ளும் ஒளிந்திருக்கும் மர்ம வீரனாக வீரப்பன் அன்று தெரிந்தான். சந்தனக்கட்டைகளையும் யானைத் தந்தங்களையும் கடத்திக் கடைசியில் ராஜ்குமாரை கடத்தியபோது வீரப்பனை எப்படித்தான் அழைப்பது என்ற குழப்பங்கள் எங்களுக்குள் அன்று உருவானது. நக்கீரன் கோபாலின் மீசையில்கூட பேரார்வம் எழுந்தது.
பிறகு புரியத்தொடங்கிய அரசியலில் வீரப்பனின் வகிபாகம் பிறிதொன்றாகப் பிடிபட்டது. இவை அனைத்தையும் The Hunt for Veerappan தொடர் ஒரு நேர்கோட்டில் கொண்டுவந்திருக்கிறது.
வீரப்பன் தொல்லையை ஒழித்துக்கட்டுவதற்கு அகிம்ஸாவாதி வேடமிட்டு வந்த சிறினிவாஸ் என்ற பொலீஸ் அதிகாரியுடன் வீரப்பனின் சகோதரி தகாத உறவிலிருந்தார் என்ற வீரப்பனின் சந்தேகத்துடன் ஆரம்பிக்கும் பழிவாங்கும் படலம், தொடர்ச்சியாக விகாரமடைகிறது. அதன்பிறகு, மாறி மாறி வருகின்ற வீரப்பன் பிடிகாரர்களை, எப்படியெல்லாம் வீரப்பன் போட்டுத்தள்ளினான் என்பதையும் பெருங்காட்டின் ராஜாவாக எவ்வாறு ஆட்சி செலுத்தினான் என்பதையும் The Hunt for Veerappan தொடர் சொல்லிச் செல்கிறது. புலனாய்வு ஊடகவியலாளர், வீரப்பன் வேட்டைக்குப் பொறுப்பாயிருந்தவர்கள் என்று ஒருபக்கத்திலும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் வாக்குமூலங்களோடும் தொடர் விரிந்து செல்கிறது.

ஆனால், வீரப்பனுக்கு எவ்வாறு ஆயுதங்கள் கிடைத்தன என்பதையும் பொலீஸ் தரப்பின் முக்கியமானவர்களைப் போட்டுத்தள்ளுமளவுக்கு பொலீஸ் தரப்பிலிருந்து வீரப்பனுக்கு எவ்வாறு – யார் யார் – உளவு வேலை நடந்தது போன்ற விடயங்களை தொடர் கெட்டித்தனமாகத் தவிர்த்திருக்கிறது.
அடிப்படையில் பார்க்கப்போனால், வீரப்பன் தனது கடத்தல் குற்றத்திலிருந்து நழுவிக்கொள்வதற்கு குறைந்தபட்சக் கோபத்தோடு பழிவாங்குபவனாகத்தான் முதலில் உருக்கொள்கிறான். அதன் பிறகு, தனது மக்களுக்கான பாதுகாவலனாக மாறாவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். பின்னர், தமிழ்த் தேசியவாதியாகத் தன்னைப் புனைந்துகொள்கிறான். இறுதியில் ஆளில்லாக் கூட்டத்துடன் அலைக்கழிந்து – முதுமையின் வேருடைந்து – பொலீஸின் கையால் சாகாமல் எங்காவது ஒளிந்திருந்தால்போதும் என்ற நிலமைக்குள் ஒடுங்கிவிடுகிறான். தனது திமிரைக் காட்டுவதற்கு, அரசுகளிடம் பலகோடி ரூபா பணம் கேட்டவன், பொலீஸின் சித்திரவதைக்கூடத்தில் கிடந்த தனது மனைவியை மீட்பதற்கு ஏதுவுமே செய்யாமலிருந்துவிட்டு, அந்திமகாலத்தில் மனைவியின் காதலுக்காக ஏங்கி, கஸெட்டுக்களில் அவளுக்கு ஒலித்தூது அனுப்புகிறான். அவனிடம் வீரம் என்று பிரம்மிக்கப்பட்ட அனைத்தும் கிட்டத்தட்ட உடைந்துபோகின்ற இடம் அது.

இருந்தாலும் The Hunt for Veerappan ஒட்டுமொத்தத் தொடரும் வீரப்பனை பார்வையாளனுக்குள் பெருமையாகவே ஏற்றிவைத்திருக்கிறது. அவன் மீதான அபிமானத்துக்கு சேதாரம் செய்யவில்லை. அவன் வீரன்தான் என்ற உணர்வுக்கு இடைஞ்சல் தரவில்லை. வரலாற்றில் அவனுக்குப் பெரியதொரு பெறுமதியிருக்கும் என்ற முடிவுக்கு குழப்பம் விளைவிக்கவில்லை. ஏனெனில், அந்தளவுக்கு வீரப்பனுக்கு எதிர்த்தரப்பில் நின்ற தமிழக – கர்நாடக அதிகாரத்தரப்பக்களின் மீதான பெருச்சீற்றத்தின் வெக்கை எம்மை ஆட்கொள்கிறது. அதிரடிப்படையினரின் அட்டூழியங்களை வீரப்பனுக்கு ஊடாகத்தான் கையாள முடியும் என்ற ஒற்றைத் தெரிவினை அன்று மாத்திரமல்ல, இன்றும் உணர வைக்கிறது: உறுதி செய்கிறது. இருபது வருடங்களாக பெருங்காட்டின் வீரனாக ஆட்சி செய்தவனை “பார்வைக்குறைபாட்டைச் சரிசெய்ய சத்திரசிகிச்சை செய்யலாம் வா” – என்று அம்புலன்ஸில் ஏற்றிவந்து சுட்டுக்கொலை செய்துதான் தங்களது வீரத்தினை விலாசப்படுத்தவேண்டிய நிலையிலுள்ளவர்களைப் பார்த்து ஏளனம் செய்யவைக்கிறது.

வரலாறு மக்களுக்கானது. அரசுகளுக்கானது அல்ல. அந்தவகையில், வீரப்பனை வரலாறு அணையாது வைத்திருக்கிறது.

Review by ப தெய்வீகன்

Latest news

குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து பெரும் நிவாரணம்

குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் தங்கள் ஆற்றல் கட்டணத்தில் $1000 தள்ளுபடி பெற உள்ளனர். குயின்ஸ்லாந்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விரிவான...

தெற்கு ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கான புதிய சட்டங்கள்

தெற்கு ஆஸ்திரேலியா குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கு மீண்டும் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தொடர்ந்து, குடும்ப வன்முறை குற்றவாளிகள் நாட்டின் சில கடுமையான...

நியூ சவுத் வேல்ஸில் சிறு குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நிமோனியா பாதிப்புகள்

நியூ சவுத் வேல்ஸில் சிறு குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் நிமோனியா நோயுடன் அவசர சிகிச்சைப் பிரிவில்...

மெல்போர்னின் Clyde North-ஐ சுற்றியுள்ள மக்களுக்கு தொலைபேசிக் கோபுரம் பற்றிய வாக்குறுதி

பல வருடங்களாக மோசமான கையடக்கத் தொலைபேசி சமிக்ஞைகளால் அவதிப்பட்டு வரும் Melbourne Clyde North பகுதியைச் சூழவுள்ள மக்களுக்கு தொலைபேசிக் கோபுரத்தை நிறுவித் தருவதாக வாக்குறுதி...

கஞ்சா சாகுபடி மற்றும் உற்பத்தி பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம்

பல்லாரட் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் மருத்துவ கஞ்சா சாகுபடி மற்றும் உற்பத்தி குறித்த தேசிய கல்வி பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. ஒற்றைத் தலைவலி, புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள், கால்-கை வலிப்பு...

அவுஸ்திரேலியாவுக்கு வர விசா கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஒரு அறிவுரை

ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு உள்துறை அமைச்சகம் தொடர் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமின்றி அவுஸ்திரேலியர்களும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...