பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி நாசா செலுத்தியது.
இத்திட்டமானது, சிறுகோள்களை ஆய்வு செய்வது மற்றும் அவற்றின் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முக்கியமான செயற்திட்டமாகும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தது 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும்.
இதன் மூலம் சூரிய குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், அதன் ஆரம்ப கட்ட கோளுருவாக்கம், புவியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் கரிம சேர்மங்களின் மூலம் ஆகியவற்றை ஆராயவுள்ளனர்.
ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம், 2 ஆண்டுகள், 2 கோடி கிலோமீற்றர் தூரம் பயணித்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பென்னு என்ற விண்கல்லை நெருங்கியது. பென்னுவில் இருந்து 19 கிலோமீற்றர் தூரத்தை அணுகியது.
அந்த தொலைவில் இருந்தபடியே தொடர்ந்து பல மாதங்கள் பென்னுவை சூழ்ந்து ஆய்வு செய்து அங்கு மாதிரியை சேகரிக்கும் இடத்தை தேர்வு செய்தது.
அதன்பின், தரையிறங்காமல் மிக நெருக்கமாக சென்று இயந்திர கையை நீட்டி விண்கல்லில் உள்ள மாதிரிகளை சேகரித்துள்ளது.