ரஷியாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை நீடிப்பது லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போரில் ஈடுபட்டு வரும் சூழலில், அது பிற வளர்ச்சி அடையாத நாடுகளை கடுமையாக பாதிக்கும் என உலக சுகாதார அமைப்பு முன்பு எச்சரித்து இருந்தது.
இது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் குறிப்பிட்ட அளவில் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக எரிபொருள் விலை உயர்வு சுட்டி காட்டப்படுகிறது. இந்த சூழலில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷியா தடுத்து நிறுத்தி உள்ளது.
இதனால், துறைமுகங்களில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஜெலன்ஸ்கி தொலைக்காட்சியில் இன்று ஆற்றிய உரை ஒன்றில், ரஷியாவின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடிக்குமென்றால், லட்சக்கணக்கானோர் பசி, பஞ்சத்திற்கு ஆளாவார்கள் என கூறியுள்ளார். உக்ரைனால், கோதுமை, சோளம், எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.