இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் கடந்த 7-ம் தேதி இலங்கை – ஆஸ்திரேலியா இடையே முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில், இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் கொழும்புவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். அந்த அணி 17.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிகம் நேரம் எடுத்து கொண்டதால் இலங்கை அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தசுன் ஷனக்கா தலைமையிலான இலங்கை அணி இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனக்கா தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.