இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, கடந்த ஒரு நாளில் புதிதாக 8,329 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்றும் 2.41 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 994 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 10 உயிரிழப்புகள் பதிவான நிலையில் நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு 105 நாள்கள் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கோவிட் பாதிப்பு 3,081 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், மும்பையில் மட்டும் 1,956 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் புதிதாக 2,813 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கோவிட் சிகிச்சையில் உள்ள 66 சதவீதம் பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தான் உள்ளனர். நாட்டில் கடந்த ஒரே நாளில் 15 லட்சத்து எட்டாயிரத்து 406 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அம்மாநில அரசு பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.