பல மாதங்களாக உணவு, எரிபொருள் மற்றும் மின்சார தட்டுப்பாட்டிற்கு பின்னர் கடனில் மூழ்கியிருந்த இலங்கை பொருளாதாரம் “சரிந்துவிட்டது” என்றும் எண்ணையை இறக்குமதி செய்ய நிதி இல்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி நெருக்கடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, சீனா, அமெரிக்கா, இந்தியா என்று பல நாடுகள் கடன், பொருள், கொடையாக பலவற்றை தந்துகொண்டே இருக்கிறது. இருந்தும் தனது நிதி நிலையை இயல்புக்குக் கொண்டு வர இலங்கை போராடிக் கொண்டே இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு அதைத் தீர்க்க போராடி வந்தது. இப்பொது எண்ணெய் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. “மிகவும் கடுமையான சூழ்நிலையை நாம் இப்போது எதிர்கொண்டு வருகிறோம். நமது பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. எண்ணையை இறக்குமதி செய்ய நிதி இல்லை. நம் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 700 மில்லியன் டாலர் கடனில் உள்ளது. இதன் விளைவாக, உலகில் எந்த நாடும் அல்லது அமைப்பும் நமக்கு எரிபொருளை வழங்கத் தயாராக இல்லை. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வருகிறது. நிலைமையை நிலையாக்க அரசாங்கம் சரியான நேரத்தில் செயல்படத் தவறிவிட்டது என்று விக்கிரமசிங்க கூறினார்.
“ஆரம்பத்தில் பொருளாதாரத்தின் சரிவை மெதுவாக்குவதற்கு குறைந்தபட்சம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இன்று நாம் இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்க தேவை இருந்திருக்காது. ஆனால் அந்த வாய்ப்பை இழந்து விட்டோம். அடிநிலைக்கும் கீழே வீழ்ச்சி ஏற்படுவதற்கான அறிகுறிகளை நாங்கள் இப்போது காண்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்தியாவிடமிருந்து 4 பில்லியன் டாலர் கடனுதவியாக இலங்கை பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவினால் இலங்கையை அதிக காலம் நிதி நெருக்கடியில் இருந்து காக்க முடியாது என விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய 7 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துவதாக இலங்கை ஏற்கனவே அறிவித்துள்ளது. நிதி நிலை மீட்பு தொடர்பான சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு நிலுவையில் உள்ளது. 2026 வரை ஆண்டுதோறும் சராசரியாக 5 பில்லியன் செலுத்த வேண்டும்.