4 ஆண்டுகளில் 5ஆவது தேர்தல் – இஸ்ரேலுக்கு இடைக்கால பிரதமர் நியமனம்

0
235
Israel's opposition leader Yair Lapid poses for a photo at his office in Tel Aviv, Israel, Thursday, May 21, 2020. (AP Photo/Oded Balilty)

இஸ்ரேல் நாட்டின் லிகுட் கட்சியின் தலைவரான பெஞ்சமின் நெதன்யாகு 2021ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த அவருக்கு கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கை கிடைக்கவில்லை. இது அடுத்து யாமினா என்ற கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து கடந்த ஜூன் மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில், அந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு எண்ணிக்கை குறைந்து சிறுபான்மை அரசாகிவிட்டது. இதனால் நப்தாலி பென்னட் பிரதமர் பதவியை இழந்துள்ளார். அத்துடன் அந்நாட்டின் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கு தயாராகியுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் நப்தாலி பென்னட் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இஸ்ரேல் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் இவர் தான்.

இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாத காலம் உள்ளதால், இஸ்ரேல் நாட்டின் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள யாயிர் லாபிட்டுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பிரதமராக இருந்த நப்தாலி பென்னட்டிற்கும் இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேல் நாட்டில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால் ஸ்திரமான ஆட்சி அமையாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பெஞ்சமின் நெதன்யாகு திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Previous articleகேரளாவில் ஆந்தராக்ஸ் நோய் பரவல் அபாயம்
Next article110 நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அலட்சியம் வேண்டாம் WHO எச்சரிக்கை