வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதும் மக்கள் போராட்டம் தொடங்கியது. தற்போது உயர்த்தப்பட்ட விலை வங்க தேச வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது என்று வங்க தேச ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது உயர்த்தப்பட்ட விலையின் படி டீசல் ஒரு லிட்டருக்கு 34 டகா (28.41 ரூபாய்), பெட்ரோல் ஒரு லிட்டர்க்கு 44 டகா (36.76 ரூபாய்) மற்றும் ஆக்டேன் ஒரு லிட்டர்க்கு 46 டகா (38.44 ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது.வங்க தேச ஊடகங்கள் இந்த உயர்வு 51.7 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளன. வங்க தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த அளவிலான விலை உயர்வை மக்கள் சந்திக்காத நிலையில் இந்த உயர்வு உலக வர்த்தக சந்தையின் படி தவிர்க்க முடியாதது என்று அரசு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் கோபமடைந்த மக்கள் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் பல நிலையங்களில் நள்ளிரவிலும் மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக நின்றுகொண்டிருந்தனர்.