இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளின் சுவர்கள், வீதிகள் போன்ற பல இடங்களில் சிவப்பு நிறத்தில், பெரிய எழுத்துக்களால் சாரி என எழுதப்பட்டுள்ளது. கைகளால் எழுதப்பட்டு, திரும்பி பக்கமெல்லாம் சாரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் இதை யார் எழுதினார்கள், எதற்காக சாரி என குழம்பிப் போயினர்.
இது பற்றி போலீசில் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளி நிர்வாகத்தினர் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் கோபமடைந்த மாணவர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்றே அனைவரும் நினைத்தனர். இருந்தாலும் எதற்காக சாரி கேட்டார்கள் என இப்போது வரை காரணம் தெரியவில்லை.
கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்மமான முறையில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உணவு விநியோகம் செய்யும் நபர்கள் பயன்படுத்தும் பெரிய பையில் இருந்து சிவப்பு நிற சாயத்தால் அவர்கள் பல இடங்களில் சாரி என்று எழுதுவது கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பாதிவாகி உள்ளது.
அந்த நபர்கள் யார், எதற்காக இப்படி செய்தார்கள் என போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். அந்த மர்ம நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் இது போன்று செய்வது கர்நாடக போலீஸ் விதிகளின் படி தண்டைக்குரிய குற்றமாகும். அதனால் அந்த மர்ம நபர்களை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.