பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து பிகில் படத்தை இயக்கினார் அட்லி. விஜய் ஹீரோவாக நடித்த இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராயப்பன் என்ற தாதா கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற கால்பந்தாட்ட வீரர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதில் தாதா கதாபாத்திரத்தில் வயதானவர் போன்ற வேடத்தில் விஜய் நடித்திருந்தார்.
பிகில் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாக்கள் எதையும் இயக்காமல், இந்தி படங்களை இயக்க சென்று விட்டார் இயக்குனர் அட்லி. இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் லயன் என பெயரிடப்பட்ட படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படமாகும், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் இனி நடிக்க போகும் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லி தான் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்த சமயத்தில், பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் ராயப்பன் என்ற வயதான கதாபாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இரண்டாம் பாகத்தை இயக்க அட்லி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதள பக்கங்களில் பிகில் படம் பற்றிய புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து, இவர்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ராயப்பன் கதாபாத்திரம் பற்றிய தகவல்களையும் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்த்த இயக்குனர் அட்லி, தனக்கே உரிய பாணியில், செஞ்சுட்டா போச்சு என பதில் பதிவு போட்டுள்ளார். இயக்குனர் அட்லியே இவ்வாறு கூறி விட்டதால் பிகில் இரண்டாம் பாகம் வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.