ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே உள்ள நாடுகளுக்குக் குரங்கம்மை பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து நோய் பரவுமா என்பது குறித்து இன்னமும் தெளிவான தகவல் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்தது.
உலகில் 300க்கும் மேற்பட்டவர்களுக்குக் குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது, அல்லது ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பாவில் உள்ளனர்.
குரங்கம்மைப் பரவல், பொதுச் சுகாதார அவசரநிலையாகக் கருதப்படுமா என்பது குறித்துக் கேள்வி எழுந்துள்ள வேளையில், உலகச் சுகாதார நிறுவனம் அதற்குத் தெளிவான பதில் தெரியவில்லை என்றாலும் அதற்கான சாத்தியம் இல்லை என்று நம்புவதாகக் கூறியது.