சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அதே நாளன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புறப்படும்வரை, விமான நிலையத்தின் இடைவழிப் பயணிகள் காத்திருப்புப் பகுதியில் இருந்திருக்கிறார்.
அவர் விமான நிலையத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்லவில்லை. அவர் சிங்கப்பூருக்குள் நுழையவில்லை; சமூக அளவில் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.
அதனால் குரங்கம்மைத் தொற்று சமூக அளவில் பரவும் அபாயம் குறைவு என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட இரு விமானங்களில் பயணம் செய்தவர்களின் தொடர்புத் தடங்கள் கண்டறியப்பட்டன.
நெருங்கிய தொடர்பு இருந்ததாக எவரும் கண்டறியப்படவில்லை. அதனால் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் 13 பேர் 21 நாள்களுக்குத் தொலைபேசி மூலம் கண்காணிக்கப்படுவர் என்று அது தெரிவித்தது. அவர்களின் உடல்நிலை தினமும் தொலைபேசி அழைப்புகள்மூலம் கண்காணிக்கப்படும்.