
இஸ்லாமியர்களின் 5 முக்கியக் கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. ஒரு இஸ்லாமியர் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹஜ்ஜுக்கு புனித பயணம் மேற்கொண்டு விட வேண்டும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மக்காவிற்கு புனித யாத்திரை வருகின்றனர். காஃபா எனப்படும் இஸ்லாமியர்களின் முதன்மையான பள்ளிவாசல் தான் அவர்களின் முக்கிய தளம். அந்த பள்ளிவாசலை சுற்றி வந்தால் தான் அவர்களது கடமை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல், ஊரடங்கு முதலிய காரணங்களால் இந்த புனித யாத்திரை நடைபெறவில்லை. உள்ளூர் ஆட்கள் கொண்டே நடைபெற்று வந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புவதால் இந்த ஆண்டு மீண்டும் வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு ஜூலை7 முதல் 12 வரை ஹஜ் திருவிழா நடைபெற உள்ளது. ஜூலை 9 மாலை முதல் ஜூலை 10 மாலை வரை இந்தியாவில் பக்ரீத் தினம் அனுசரிக்கப்படும்.
பரந்த மைதானத்தில் லட்சக்கணக்கான யாத்திருக்கர்கள் முன்னிலையில் துல்ஹஜ் பிறை உதிக்கும் நாளில் ஒரு பேருரை நிகழ்த்தப்படும். அதன் பெயர் தான் அரஃபா உரை. முதன்முதலில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகள் நாயகம் இப்பேருரையை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது. அதில் இருந்து இந்த வழக்கம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.
அரபு மொழியில் தலைமை இமாம் எனப்படும் மதகுரு நிகழ்த்தும் இந்த உரை, ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது,பார்சி,ரஷ்யன், சைனீஸ்,வங்காளம்,துர்கிஷ், ஹவுசா மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்படும். இந்த ஆண்டு முதல் கூடுதலாக தமிழ், ஸ்பானிஷ், இந்தி, சுவாஹிலி ஆகிய 4 மொழிகளில் அரஃபா உரையை மொழி பெயர்த்து ஒளிபரப்ப இருப்பதாக சவுதி அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இம்மொழிகளில் அரஃபா உரையை மொழிபெயர்க்க தலைமை மதகுருவும் ஒப்புதல் அளித்துள்ளார்.