பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் முடிவு

0
138

பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் கடந்த இரு நாள்களில் சுமார் 50 அமைச்சர்கள் பிரதமர் போரிஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தொடர் அழுத்தம் காரணமாக போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அத்துடன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் விலகவுள்ளார் எனக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் மீது கடந்த சில மாதங்களாகவே புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இரு மாதங்களுக்கு முன்னர் அந்நாட்டில் கோவிட் லாக்டவுன் அமலில் இருந்த போது சட்டத்தை மீறி போரிஸ் தனது அமைச்சர்களுடன் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விஷயம் வெளியே அம்பலமானதும் பெரும் புயலை கிளப்பிய நிலையில், போரிஸ் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. மேலும், இந்த புகாருக்குப் பின் போரிஸ் ஜான்சன் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் போரிஸ் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து இந்த வாரம் போரிஸ் கட்சியின் கொறடாவான கிரிஸ் பின்சர் என்பவர் மீது பாலியல் அத்துமீறல் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை போரிஸ் ஜான்சன் முறையாக கையாளவில்லை எனக் கூறப்பட்டது. அதன் எதிரொலியாகவே அரசின் மீது பெரும் அதிருப்தி எழும்பத் தொடங்கியது.

தற்போது 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் போரிஸ் அரசுக்கு எதிராக ராஜினாமா செய்துள்ள நிலையில், இன்று போரிஸ்சும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கன்சர்வேடிவ் கட்சியின் முன்னணி தலைவர்களான லிஸ் டிரஸ், ஜெர்மி ஹன்ட், பென் வாலேஸ் உள்ளிட்டோர் பெயர்கள் பரிந்துரையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.