ரகசிய அறை.. கட்டுக்கட்டாக பணம்.. டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறிய இலங்கை அதிபர் மாளிகை

0
221

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்குள்ள ஆடம்பர சூழலை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும், அங்கு ரகசிய அறை ஒன்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ள இலங்கை மக்கள், இரு தினங்களுக்கு முன்பாக அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த அறைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்திய மக்கள், ரகசிய அறையில் இருந்து ஒரு கோடியே 78 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றினா். இதேபோன்று அலறி மாளிகை மற்றும் அதிபர் அலுவலகத்திலும் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

அங்குள்ள அலமாரியின் பின்னால் பதுங்கு குழி ஒன்று மறைக்கப்பட்டிருந்ததையும் போராட்டக்காரர்கள் கண்டுபிடித்துள்ளனர். லிப்ட் மற்றும் படிக்கட்டுகள் மூலம் இந்த பதுங்கு குழிக்கு செல்லலாம். இதற்கான பாதையில் கீழே சென்ற போராட்டக்காரர்கள் பகுங்கு குழியின் கதவை திறக்க முயன்றனர். எனினும் இரும்பினால் ஆன அந்த கதவை திறக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த பதுங்கு குழிக்குள் பணத்தை ராஜபக்ச குடும்பத்தினர் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலா தளம் போன்று அதிபர் மாளிகை காணப்படுகிறது. ஏராளமானோர் இங்கு வந்து அதிபர் குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கையை கண்டு வாயடைத்து செல்கின்றனர். மேலும், புகைப்படங்களும் எடுத்துகொள்கின்றனர். இந்நிலையில், அதிபர் மற்றும் அலறி மாளிகை ஆகிய இடங்களில் இருந்து, ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பல பொருட்களை சூரையாடி உள்ளதாக கூறி விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.