இலங்கை அதிபர் தேர்தல் – ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட நான்கு பேர் போட்டி

0
129

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, அதை சூறையாடினார். போராட்டமானது ராணுவம் மற்றும் காவல்துறையின் கையை மீறி போன நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பி, ராணுவ உதவியோடு தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றார். முதலில் மாலத்தீவுக்கு சென்று தஞ்சம் புகுந்த ராஜபக்ச பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்.

வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ள கோத்தபய தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில், புதிய அதிபருக்கான தேர்வு வரும் ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் 13 நிமிட சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தாமிகா தசநாயகே அதிபர் பதவி காலியாக உள்ளதாக அறிவித்தார்.

புதிய அதிபருக்கான தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெறும் எனவும், ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் இதற்கான வாக்கெடுப்பு வரும் புதன்கிழமை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவின் எஸ்எல்பிபி கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ரணில் விக்ரமசிங்கவை புதிய அதிபராக ஆதரித்து களமிறக்குகின்றனர்.எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரமதாசாவும் அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் முன்னணி வேட்பாளர்களாக உள்ள நிலையில், எஸ்ல்பிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற துல்லாஸ் அலபெருமாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஜேவிபி கட்சியின் தலைவரான அருணா திசநாயகாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். 1978ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இலங்கை அதிபரின் தேர்வு மக்களின் நேரடி வாக்கெடுப்பு மூலம் நடைபெறாமல் எம்பிக்கள் வாக்கெடுப்பு மூலம் நடைபெறவுள்ளது. புதிதாக பொறுப்பேற்கவுள்ள அதிபரின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு நவம்பர் வரை உள்ளது.