ஆஸ்திரேலியா கவனமாக நடந்துகொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய வேவு விமானத்தைச் சீன விமானம் அபாயகரமான முறையில் குறுக்கிட்டதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து சீனா அந்த எச்சரிக்கையை விடுத்தது.
பெய்ச்சிங்கும் கென்பராவும் ஒன்றை ஒன்று கடிந்துகொள்கின்றன. தென் சீனக் கடலில் தனது உளவு விமானம் பறப்பது இயல்பான ஒன்று என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆனால் தென் சீனக் கடல் தனது கட்டுப்பாட்டின்கீழ் வரும் வட்டாரம் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவும் அமெரிக்க நட்பு நாடுகளும் சீனாவின் அந்த நிலையை ஏற்கவில்லை. தென் சீனக் கடல் யார் வேண்டுமானாலும் போய்வரக்கூடிய சுதந்திரப் பகுதி என்பது அமெரிக்கத் தரப்பின் வாதமாகும்.
சுதந்திரமாகப் பயணம் செய்வது என்ற பெயரில் தனது தன்னாட்சியிலும் பாதுகாப்பிலும் தலையிடக் கூடாது என்று சீனா அதற்குப் பதில் கூறியுள்ளது.